பொங்கல் பண்டிகைக்காக தயாரிக்கப்படும் இலவச வேட்டி–சேலைக்காக கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் நூல், சாயம் மற்றும் பாபின் கட்டைகளின் அரசு தரச் சோதனை அறிக்கைகளை நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருக்கு அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கூட்டுறவு சங்க உறுப்பினர்களான நெசவாளர்கள், சங்கங்கள் வழங்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி கூலிக்கு வேட்டி மற்றும் சேலைகளை உற்பத்தி செய்து வருகின்றனர். நெசவு குறைபாடுகளுக்கு நெசவாளர்கள் பொறுப்பேற்க தயார் என்றாலும், சங்கங்கள் வழங்கும் நூல், சாயம் மற்றும் பாபின் குறைபாடுகளுக்கு அவர்களால் பொறுப்பேற்க முடியாது. கைத்தறித்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், உற்பத்தி செய்யப்படும் வேட்டி–சேலைகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருக்க வேண்டும்; குறைபாடு கண்டறியப்பட்டால் சங்க ஊழியர்கள் மற்றும் உற்பத்தி செய்யும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சங்கங்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு லாட் பாவு, ஊடை நூல் மற்றும் பாபின் கட்டைக்கும் எடுக்கப்படும் அரசு ஆய்வகச் சோதனை அறிக்கையின் நகல்களை சங்க ஊழியர்கள் மற்றும் உற்பத்தி செய்யும் நெசவாளர் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். நூலின் கவுண்ட், பி.சி., சி.எஸ்.பி. போன்ற விவரங்களை அறிந்து கொள்வதன் மூலம் நெசவாளர்கள் உற்பத்தியை திட்டமிடவும், தரக் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறியவும் முடியும்.
மேலும், அரசு பரிந்துரைக்கும் மத்திய அரசு மற்றும் மாநில ஜவுளி ஆய்வகங்களில் சங்க உறுப்பினர்கள் நூல்களைச் சோதிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. ஊடை நூல் கவுண்ட் அரசு நிர்ணயித்துள்ள கூடுதல்/குறைவு இரண்டு சதவீத அளவுக்குள் வழங்கப்பட வேண்டும் என்றும்; கவுண்ட் குறைவாக இருந்தால் நெசவாளர்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
தரச் சான்றிதழ்களை உறுப்பினர்களுக்கு வழங்க உரிய ஆணை பிறப்பிக்குமாறும், இதன் மூலம் இலவச வேட்டி–சேலை உற்பத்தியை தரமாகவும் விரைவாகவும் மேற்கொள்ளவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வழிவகை செய்யுமாறும் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.